சேலத்தில் 2-வது நாளாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

சேலத்தில் 2-வது நாளாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் சுற்றுலா மாளிகையில் முக்கிய நிர்வாகிகளிடம் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
சேலத்தில் 2-வது நாளாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
Published on

சேலம்:

சேலத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு வந்தார்.

3 நாட்கள் மாவட்டத்தில் தங்கி இருக்கும் அவர் நேற்று மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக ரூ.30 கோடி மதிப்பிலான கட்டி முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

மாலையில் அஸ்தம்பட்டியில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்ற அவர் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தனித்தனியாக சந்தித்து பேசினார். பொது மக்கள், இரும்பாலை ஊழியர்களிடமும் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.

2-வது நாளாக இன்று கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் சுற்றுலா மாளிகைக்கு வந்த அவர் அங்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் அரசியல் நிலவரம் குறித்து தொடர் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இன்று மாலை 4 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானியில் தான் படித்த வாசவி கல்லூரிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசுகிறார்.

நாளை (30-ந் தேதி) காலை முதல் மாலை வரை எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

மேலும் தொகுதிக்கு செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஜலகண்டாபுரம், நங்கவள்ளி பகுதிகளுக்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடிக்கு செல்வதையொட்டி கலெக்டர் சம்பத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று எடப்பாடி சுற்றுலா மாளிகையில் நடந்தது.

இதில் முதல்வர் வந்து செல்லும் பாதை, மற்றும் அவரது பாதுகாப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. முதல்வர் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் ஐ.ஜி. பாரி தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

3 நாள் முகாமை முடித்து விட்டு நாளை இரவு எடப்பாடி பழனிசாமி கோவைக்கு காரில் சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com