எந்த முதலமைச்சர் இறந்த போதும் நீதி விசாரணை நடந்ததில்லை- மு.க.ஸ்டாலின்

எந்த ஒரு முதல்-அமைச்சர் இறந்த போதும் நீதி விசாரணை நடந்தது கிடையாது என்றும் ஜெயலலிதாவுக்குத்தான் முதல் முறை என்றும் ஒட்டப்பிடாரம் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #TNByPoll
எந்த முதலமைச்சர் இறந்த போதும் நீதி விசாரணை நடந்ததில்லை- மு.க.ஸ்டாலின்
Published on

தூத்துக்குடி:

இடைத்தேர்தலை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று மாலை அவர் கோரம்பள்ளம் பஜாரில் திரண்டு இருந்த மக்களிடையே பேசியதாவது:-

வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து சிறப்பான வெற்றியை பெற்றுத்தர வேண்டும். கடந்த 18-ந் தேதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அவர் இந்த நாட்டின் பிரதமராக இருக்க கூடாது என்று கருதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு உதய சூரியன் சின்னத்துக்கு ஆதரவு தந்து உள்ளார்கள்.

அதே போன்று மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் தமிழகத்தில் ஆட்சியில் உள்ள எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற உணர்வோடு, வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தலில் தி.மு.க.வுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்க வந்து உள்ளேன்.

தூத்துக்குடியில் கடுமையாக மழை பெய்து வெள்ளம் வந்த போது, நிவாரண பணிகளில் எப்படி ஈடுபட்டோம் என்பது உங்களுக்கு தெரியும். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையின் போது, இந்த ஆட்சி 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொடுமையை கண்டித்து தி.மு.க. சார்பில் ஓடோடி வந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தோம். நிவாரண பணிகளில் ஈடுபட்டோம். இது போன்று பல பணிகளில் உங்களோடு இருந்து பாடுபடுவது தி.மு.க..

18-ந் தேதி நடந்த தேர்தலில் மோடி வீட்டுக்கு செல்கிறார். அதே போன்று இங்கு நடந்து கொண்டு இருக்கும் எடப்பாடி தலைமையிலான ஆட்சியும் வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது. இங்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறப்போகிறது.

ஜெயலலிதா மரணத்திலேயே மர்மம் இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். எந்த ஒரு முதல்அமைச்சர் இறந்த போதும் நீதி விசாரணை நடந்தது கிடையாது. ஜெயலலிதாவுக்குத்தான் முதல் முறை. ஆகையால் இந்த மரணத்தில் மர்மம் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டாலே அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்ய முடியும்.

கோரம்பள்ளம் குளத்தில் எல்லா பருவகாலத்திலும் தண்ணீர் தேக்கும் வகையில் தூர்வாரப்படும். குடிநீர் தேக்க தொட்டி, கழிவுநீர் வடிகால், பஸ் வசதி, ரே‌ஷன் கடை உள்ளிட்ட உங்கள் தேவைகளை நீங்கள் வெற்றி பெறச்செய்யும் சண்முகையா நிறைவேற்றித் தருவார். தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சனை உள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் இருந்தால் ஓரளவுக்கு சரி செய்து இருக்க முடியும்.

தாமிரபரணி ஆறு சீவலப்பேரியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தடையின்றி தண்ணீர் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். தூத்துக்குடி- சென்னை கூடுதல் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும். கேபிள் டி.வி. கட்டணத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவோம். ஆகையால் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை, கூட்டாம்புளி, சேர்வைக்காரன்மடம் தங்கம்மாள்புரம், கட்டாலங்குளம், முடிவைத்தானேந்தல் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

மு.க.ஸ்டாலின் கோரம்பள்ளத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு புதுக்கோட்டைக்கு சென்றார். அங்கு மெயின் பஜாரில் நடந்து சென்று கடைகளில் இருந்த வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். அதே போன்று கூட்டாம்புளி பகுதியில் காரில் இருந்து இறங்கி நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பஸ்சில் ஏறி, அதில் இருந்த பயணிகளிடமும் வாக்கு சேகரித்தார்.

சேர்வைக்காரன் மடத்தில் உள்ள காமராஜர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இரவு 7.40 மணி அளவில் முடிவைத்தானேந்தலில் பிரசாரத்தை நிறைவு செய்தார். பின்னர் அவர் கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். #DMK #MKStalin #TNByPoll

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com