டெங்கு தடுப்பு பணியை சரியாக செய்யாத 2 ஊராட்சி செயலாளர்கள் சஸ்பெண்டு

டெங்கு தடுப்பு பணியை சரியாக செய்யாத ஊராட்சி செயலாளர்கள் 2பேரை சஸ்பெண்டு செய்து திருவண்ணாமலை கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
டெங்கு தடுப்பு பணியை சரியாக செய்யாத 2 ஊராட்சி செயலாளர்கள் சஸ்பெண்டு
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அதேபோல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.

இதையடுத்து பொது மக்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் சுகாதார பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு பணியில் வருவாய்த் துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து நகராட்சி, ஊராட்சிகள் தோறும் கொசு ஒழிப்பு பணி வேகமாக நடைபெறுகிறது. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் சிகிச்சை பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கந்தசாமி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

காட்டாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் மற்றும் வீடுகளில் கொசு புழுக்கள் வளருகின்றதா? என்பதையும் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் காய்ச்சலுக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களது இருப்பிட விவரங்களை சேகரிக்கின்றனர்.

இதில் எந்த பகுதி அல்லது கிராமத்தை சேர்ந்தவர்கள் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சேகரிக்கின்றனர்.

இதன் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட பகுதி மற்றும் கிராமங்களில் வருவாய்த் துறையினருடன் இணைந்து முழு சுகாதார பணி நடைபெறுகிறது.

டெங்கு கொசு ஒழிப்பு பணி முறையாக நடக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் உதவி கலெக்டர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் காலை நேரத்தில் ஆய்வு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

பொதுமக்களை பாதிக்கும் வகையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் சரிவர ஈடுபடாத அரசு அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் கந்தசாமி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சானாநந்தல் ஊராட்சியிலும், வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இளங்காடு ஊராட்சியிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளவில்லை என்று கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

புகாரை தொடர்ந்து நேற்று டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை சரிவர மேற்கொள்ளாத சானாநந்தல் ஊராட்சி செயலாளர் கார்த்திகேயனையும், இளங்காடு ஊராட்சி செயலாளர் தண்டபாணியையும் சஸ்பெண்டு செய்து கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.

கலெக்டரின் இந்த அதிரடி உத்தரவால் சரிவர பணி மேற்கொள்ளாத அரசு அலுவலர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com