திருப்பூரில் லஞ்ச ஒழிப்பு வேட்டை - கலால்துறை பெண் உதவி ஆணையர், 2 ஊழியர்களிடம் விசாரணை

திருப்பூரில் கலால்துறை பெண் உதவி ஆணையர் மற்றும் 2 ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கலால் துறை பெண் உதவி ஆணையர் ஜெயராணியிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார்.
கலால் துறை பெண் உதவி ஆணையர் ஜெயராணியிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் முதல் தளத்தில் கலால் உதவி ஆணையர் அலுவலகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதன் உதவி ஆணையராக ஜெயராணி (வயது 45) என்பவர் இருந்து வருகிறார். இந்த கலால் துறை மூலம் டாஸ்மாக் பார்கள் மற்றும் டாஸ்மாக்கடைகளில் முறையாக மதுவிற்பனை நடைபெறுகிறதா? என்றும், ஓட்டல் மற்றும் விடுதிகள் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா? என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கலால் உதவி ஆணையர் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் விடுதி உரிமையாளர்களிடம் முறைகேடாக பணம் பெற்று வருவதாகவும், இதற்காக அவரது டிரைவர் உள்பட சிலரை பயன்படுத்தி வருவதாகவும் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு தட்சிணா மூர்த்தி தலைமையில் மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் பேபிபாலா, இன்ஸ்பெக்டர்கள் கவுசல்யா, எழிலரசி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மாலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

தொடர்ந்து அங்கு கலால் உதவி ஆணையர் அலுவலகத்திற்குள் சென்று, உதவி ஆணையர் ஜெயராணியிடம் விசாரணை நடத்தினர். கலால் துறைக்கு சொந்தமான 2 அறைகளையும் பூட்டினர். அப்போது யாரையும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை. உள்ளே இருந்தவர்களையும் வெளியே அனுப்பிவிட்டனர்.

மேலும், அங்கிருந்த ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சரிபார்த்தனர். இரவு 9 மணி வரை இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 280 பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக ஜெயராணி மற்றும் வசூலித்து வந்த 2 ஊழியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com