நெல்லையில் கல்லூரி மாணவர்கள் மறியலுக்கு முயற்சி: இந்திய மாணவர் சங்க நிர்வாகி கைது

நீட் தேர்வுக்கு எதிராக நெல்லையில் சாலை மறியலுக்கு முயன்ற இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் கல்லூரி மாணவர்கள் மறியலுக்கு முயற்சி: இந்திய மாணவர் சங்க நிர்வாகி கைது
Published on

நெல்லை:

நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், தற்கொலை செய்த அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் நெல்லையில் உள்ள கல்லூரி மாணவ-மாணவியர் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பாளை வ.உசி.மைதானத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மாணவர்கள் கூடியது போல ஏராளமானோர் வர இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி மாணவ-மாணவியர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கம்போல இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். இந்திய மாணவர் சங்க மாவட்ட பொறுப்பாளர் வில்சன் தலைமையில் கல்லூரி முன்பாக உள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்ய திட்டமிட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து வில்சன் தலைமையில் மாணவர்கள் அனைவரும் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.

வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே அவர்கள் வந்தபோது ஊர்வலமாக செல்லக்கூடாது என போலீசார் தடுத்தனர். இதையடுத்து வில்சனை போலீசார் கைது செய்தனர். மாணவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிக்கு சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com