

திருவனந்தபுரம்:
சபரிமலையில் பிரசித்திப் பெற்ற சுவாமி அய்யப்பன் கோவில் உள்ளது.
இந்த கோவில் உள்ள இடம் மிக அடர்ந்த காட்டுப் பகுதியாக உள்ளதால் இங்கு புலி, யானைகள் உள்பட காட்டு மிருகங்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். சபரிமலை கோவிலின் நடை திறந்திருக்கும் காலங்களில் அய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க கூட்டம் கூட்டமாக இந்த காட்டுப்பகுதி வழியாக சபரிமலை அய்யப்பனை தரிசிக்க செல்வார்கள்.
மேலும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக போலீசாரும் வன ஊழியர்களும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள கொடி மரம் பழுதடைந்ததை தொடர்ந்து தற்போது புதிய தங்க கொடி மரம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
சபரிமலை பகுதியில் உள்ள பம்பை கணபதி கோவிலில் ஏராளமான கலைஞர்கள் தங்க கொடி மரத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளதால் சபரிமலைக்கு பக்தர்கள் செல்வதில்லை.
ஆள் நடமாட்டம் குறைந்ததை தொடர்ந்து வனப்பகுதியில் உள்ள மிருகங்கள் அங்கிருந்து வெளியேறி பம்பை வரை சர்வ சாதாரணமாக நடமாட தொடங்கி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே பம்பையில் புலி உறுமும் சத்தம் கேட்பதாகவும் சிலர் புலி நடமாட்டத்தை பார்த்ததாகவும் பரபரப்பு நிலவி வந்தது. இதனால் சிற்ப கலைஞர்கள் இடையே அச்சம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தேவசம் போர்டு ஊழியர்கள் போட்டு பார்த்தனர்.
அப்போது பம்பையில் ஒரு பெரிய புலி நடமாடும் காட்சி பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து இந்த தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் பம்பைக்கு சென்று அந்த கேமரா காட்சிகளை போட்டு பார்த்தனர். மேலும் பம்பையில் துப்பாக்கி ஏந்திய வன ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.