ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப் அறிவிப்பை எதிர்த்து இஸ்தான்புல் நகரில் ஆயிரக்கணக்கானோர் பேரணி

ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
Published on

இஸ்தான்புல்:

கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம் மதத்தினருக்கு புனித நகராக இருக்கும் ஜெருசலேம் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கூறிவருகிறது. ஆனால், இதை எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கிடையே, ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில தினங்களுக்கு முன் அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டார்.

அதிபர் டிரம்பின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளும், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற ஆசிய நாடுகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

டிரம்பின் இந்த முடிவு உலகின் ஒட்டுமொத்த அமைதியை சீர்குலைப்பதாக உள்ளது என பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆயிரக்கணக்கானோர் இன்று பெரும் திரளாக ஒன்றுகூடினர். அவர்கள் ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், ஜெருசலேம் எங்களுடையது, இஸ்ரேலை விட்டு வெளியேறு என டிரம்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். பொதுமக்களின் பேரணியை முன்னிட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com