அ.தி.மு.க. ஆட்சி தொடர 19 எம்.எல்.ஏ.க்களை முதல்வர் அழைத்து பேச வேண்டும்: தோப்பு வெங்கடாச்சலம்

அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 19 எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து பேச வேண்டும் என பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சி தொடர 19 எம்.எல்.ஏ.க்களை முதல்வர் அழைத்து பேச வேண்டும்: தோப்பு வெங்கடாச்சலம்
Published on

பெருந்துறை:

பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். இவர் தினகரன் ஆதரவாளராக செயல்பட்டார். அவருக்கு அமைப்பு செயலாளர் பதவியை தினகரன் வழங்கினார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்தது. இதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் தோப்பு வெங்கடாச்சலம் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அதனால் அவர் யாருக்கு ஆதரவு? என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு இன்று பதில் அளிப்பதாக தோப்பு வெங்கடாச்சலம் கூறி இருந்தார். அதன்படி பெருந்துறையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரிய பெரிய இயக்கங்களில் சில நேரங்களில் குழப்பங்கள் ஏற்படுவது சகஜம். அ.தி.மு.க.விலும் எம்.ஜி.ஆர். இறந்தபோது பிளவு ஏற்பட்டது. அம்மா அந்த பிளவை ஒன்றுபடுத்தினார். இப்போதும் 3 அணியாக பிளவுபட்டு இருந்தது.

அம்மா இருந்தபோது நான் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. ஆட்சி நூறாண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார். அதேபோல மக்களும் 5 ஆண்டு காலம் ஆட்சியை வழங்கி இருக்கிறார்கள்.

அ.தி.முக. ஆட்சி என்பது மறைந்த அம்மா ரத்தத்தில் ஏற்பட்ட ஆட்சி. அந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஒட்டு மொத்த அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பமும் அதுதான்.

அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 19 எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து பேச வேண்டும். நான் அ.தி.மு.க.வில்தான் உள்ளேன். என்னை அந்த அணி இந்த அணி என்று கூற வேண்டாம்.

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் கைகோர்த்து ஒன்று சேர்ந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதைதான் அ.தி.மு.க. தொண்டர்களும் எதிர்பார்த்தனர். அவர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். அம்மாவின் இந்த ஆட்சி 5 ஆண்டு தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com