தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமி மரணம்: மு.க.ஸ்டாலின், வைகோ நேரில் அஞ்சலி

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்.பெரியசாமி இன்று காலை மரணமடைந்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமி மரணம்: மு.க.ஸ்டாலின், வைகோ நேரில் அஞ்சலி
Published on

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்தவர் என்.பெரியசாமி நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 78.

போரூர் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த என்.பெரியசாமி உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் ஆஸ்பத்திரிக்கு சென்று பெரியசாமி உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

என்.பெரியசாமியின் உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடிக்கு இன்று மாலை கொண்டு செல்லப்படுகிறது. அவரது இறுதிச்சடங்கு நாளை மறுநாள் (28-ந் தேதி) காலை 10 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெறுகிறது.


தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் என்.பெரிய சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக நாளை மாலை தூத்துக்குடி செல்கிறார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியால் முரட்டுபக்தன் என அழைக்கப்பட்ட என்.பெரியசாமி 32 ஆண்டுகளாக தூத்துக்குடி தி.மு.க. மாவட்ட செயலாளராக பணியாற்றியுள்ளார். சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் அவரது சொந்த ஊராகும். கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பாசத்திற்குரியவராக இருந்தார்.

ஒன்றுபட்ட நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தின் மாவட்ட பிரதிநிதி, மாநில தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பதவிகளை வகித்தார். 1987-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உதயமானது முதல் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார்.

1986-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை தூத்துக்குடி நகராட்சி தலைவராக பதவி வகித்துள்ளார்.

1989 முதல் 1991 வரை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்துள்ளார். நெருக்கடி கால நிலையில் மிசாவில் கைது செய்யப்பட்டார்.

பெரியசாமியின் மகள் கீதாஜீவன் தற்போது தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் கால்நடை, சமூகநலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com