துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது

திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக எழுந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது
திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது
Published on

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் அந்த நிலத்தை பார்வையிடுவதற்காக இமயம்குமார், சென்னையை சேர்ந்த ரவுடிகளுடன் செங்காடு சங்கோதி அம்மன் கோவில் அருகே சென்றார். அங்கு எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி இருந்தார். அப்போது நிலம் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது இமயம் குமாருடன் வந்த ரவுடி கும்பல் திடீரென எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி சுட்டார்.

அந்த வழியாக சென்ற தையூரை சேர்ந்த கீரை வியாபாரி சீனிவாசன் மீது அந்த குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அரிவாளால் வெட்டப்பட்டதால் படுகாயம் அடைந்த லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோன்று படுகாயம் அடைந்த இமயம்குமார் தரப்பினரும் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று இச்சம்பவம் தொடர்பாக திருப்போரூர் காவல் நிலையத்தில் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, ஜஜி நாகராஜன், எஸ்.பி.கண்ணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக எஸ்.பி. கண்ணன் கூறுகையில் ‘‘திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் எம்எல்ஏ இதயவர்மன் விரைவில் கைது செய்யப்படுவார். கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். குமார் என்பவர் தனது பட்டா நிலத்தில் கால்வாய் அமைப்பதாக புகார் அளித்திருந்தார். வாய்தகராறு முற்றி இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

திருப்போரூர் எம்எல்ஏவும், அவரது தந்தையும் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். கோஷ்டி மோதல் தொடர்பாக இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்போரூர் கோஷ்டி மோதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ. இதயவர்மன் மேடவாக்கம் அருகே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com