

கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்தபோதும் வறட்சியினால் அணைகளின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது.
தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் மழை முற்றிலும் ஓய்ந்து நீர்வரத்து குறைந்துள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உள்ளது. 128 கன அடி நீர் வருகிறது. 225 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 32.71 அடியாக உள்ளது. 109 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31.85 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.48 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
மழை எங்கும் இல்லை. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தண்ணீர் தேவையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் கோடை காலத்தில குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது.
வைகை அணையில் உள்ள நீர் இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் அணையில் 7 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளது. இதனால் தேனி, மதுரை மாவட்ட பொதுமக்களின் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் செய்வதறியாது உள்ளனர். மழை பெய்தால் மட்டுமே கோடை காலத்தை சமாளிக்க முடியும்.