

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் கடந்த மாதம் 7-ந்தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
அந்த வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் பலியாகினர். தொடர்ந்து பல நாட்கள் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில் 65 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் பள்ளி குழந்தைகள் 19 பேரும் அடங்குவர். அவர்களது உடல் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த குழந்தைகள் படித்த பள்ளியின் ஆசிரியர்கள், பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவர்கள் ஆசிரியர் தினமான நேற்று குழந்தைகள் அடக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு சென்று மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மூணாறு நிலச்சரிவு குறித்து தாசில்தார் பினுஜோசப் தலைமையிலான வருவாய்த்துறை சிறப்பு குழு விசாரணை நடத்தியது. அந்த குழு விசாரணை அறிக்கையை இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசிடம் சமர்ப்பித்தது.
அதில் நிலச்சரிவில் சேதம் அடைந்த வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களால் ரூ.88 லட்சத்து 41 ஆயிரத்து 824 இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் நஷ்டஈடு வழங்க பரிந்துரை செய்துள்ளது.