

தஞ்சாவூர்:
விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், ரெயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு கட்டுப் படியான விலை கொடுக்க வேண்டும், குறைந்தபட்ட ஊதியம் வழங்க வேண்டும்,
அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், அனைவருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழில் சங்கத்தினர் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒருசில ஆட்டோக்கள் ஓடவில்லை. பஸ்கள் வழக்கம்போல் இயங்கியதால் பயணிகள் யாரும் பாதிப்படையவில்லை. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதையொட்டி தஞ்சை ரெயில் நிலையம் முன்பு பாது காப்புக்காக ஏராளமான போலீசார் குவிக் கப்பட்டிருந்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு கோஷங்களை எழுப்பியவாறே ரெயில் நிலையம் முன்பு வந்தனர். திடீரென அவர்கள் சுற்றி வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை அகற்றி ரெயிலை மறிப்பதற்காக ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.
இதில் போலீசாருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரெயிலை மறிக்க முயன்ற ஏராளமானோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்களை அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணத்திலும் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம், தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்கத்தினர் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேப்போல் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள வங் கிகளை சேர்ந்த 200 ஊழியர்கள் கும்ப கோணம் இந்தியன் வங்கி மெயின் கிளை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தை தொடர்ந்து திருவாரூர்-நாகை மாவட்டங்களிலும் அனு மதியின்றி போராட்டம், சாலை மறியல் நடைபெற்றது. அங்கும் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.