

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஐயர்பாடி மற்றும் ரொட்டிக்கடை பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தைகள் இரவு நேரங்களில் மட்டும் அல்லாமல் பகலிலும் உலா வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ரொட்டிக்கடையில் செல்வக்குமார் என்பவருடைய வீட்டில் உள்ள கோழியை பிடிப்பதற்காக சிறுத்தை வந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதமே வனத்துறை கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் நேற்று இரவு ஐயர்பாடி துணை மின் நிலையம் அருகில் இரவு நேரத்தில் சர்வ சாதாரணமாக சாலையை கடந்து கம்பீரமான நடையுடன் சிறுத்தை சென்றுள்ளதை கண்ட சுற்றுலா பயணிகள் படம்பிடித்து தற்போது வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். அது வைரலாகி வருகிறது.
எனவே வனத்துறை இதனை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சிறுத்தைகளால் உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அப்பகுதியில் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே வால்பாறையை அடுத்த அதிரப்பள்ளி அருகே உள்ள வெட்டிக்குழி பகுதியில் கடந்த சில வாரங்களாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கோழிகள், ஆடுகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை சிறுத்தை வேட்டையாடியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர்.
இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கூண்டு அமைத்து கண்காணிப்பு மேற்கொண்டனர். இதன் பலனாக நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை கூண்டில் சிக்கியது.
பின்னர் சிறுத்தையை பரியாரம் வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்ற வனத்துறையினர், வன விலங்கு மருத்துவர் டாக்டர் மிதுன் தலைமையிலான குழுவின் மூலம் மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கூண்டின் இரும்பு கம்பியில் மோதியதால் முகத்தில் லேசான காயம் ஏற்பட்டிருந்தது தவிர, சிறுத்தை முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சாலக்குடி வனக்கோட்ட அலுவலர் வெங்கடேஸ்வரன் மேற்பார்வையில், சிறுத்தை பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் கோழிகளை வேட்டையாடியது இதைவிட பெரிய சிறுத்தை என்றும், அப்பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் நடமாடக்கூடும் என்றும் வெட்டிக்குழி பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உறுதியானால், கூடுதல் கூண்டுகள் அமைத்து பிடிக்கவும், கண்காணிப்பு தீவிரப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.