வழித்தகராறில் வாலிபரை கத்தியால் குத்திக்கொலை

வாலிபரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.
வழித்தகராறில் வாலிபரை கத்தியால் குத்திக்கொலை
Published on: 
Summary

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள தியாகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விஜய குமார் மகன் லட்சுமிபதி (22). இவர் தனியார் கல்லூரியில் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இவரது நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த மகேஷ் (20), இம்ரான் (33) ஆகியோருடன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் ராயக்கோட்டைக்குச் சென்றார்.

வாக்குவாதம்

அங்கு இம்ரானின் சித்தி வீட்டுக்குச் சென்றுவிட்டு, பின்னர் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பேட்டகானப்பள்ளி அருகே சில வாலிபர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு கூட்டமாகப் பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட மூவரும் அங்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா என விசாரிப்பதற்காகச் சென்றனர். பின்னர் வழிவிடுமாறு கேட்டபோது, அங்கிருந்த இளைஞர்களுக்கும் லட்சுமிபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொலை

இதில் ஆத்திரமடைந்த கூட்டத்தில் இருந்த ஒருவர், லட்சுமிபதியின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவரை இம்ரான் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு லட்சுமிபதியைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

போலீசார்

இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். லட்சுமிபதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், வாலிபரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com