

கோவையில் நேற்று மாலை கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதேபோல மணியகாரன்பாளையம், நல்லாம்பாளையம் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
ஆர்.எஸ்.புரம் பகுதியில் மழை தூறிக் கொண்டு இருந்தபோது ஒரு பெண் உள்பட 3 பேர் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்தனர். அப்போது ரோட்டோரம் நின்ற மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனை பார்த்த அவர்கள் 3 பேரும் அலறி அடித்து ஓடினர். அவர்கள் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர் என்றே சொல்ல வேண்டும்.
மரம் விழப்போவதை கவனித்து இருக்காவிட்டால் அதில் அவர்கள் சிக்கி இருப்பார்கள். மரம் விழுவதும், அதிர்ஷ்டவசமாக 3 பேர் தப்பிச் செல்வதும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.