

யு.பி.ஐ. சேவை கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் 61 மாவட்டத் தலைவர்கள் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய நகர் பகுதிகளில் இன்று பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யு.பி.ஐ. பண பரிவர்த்தனைக்கு வருகிற 15-ந்தேதி முதல் 0.4 சதவீதம் சேவை கட்டணம் விதிப்பதாகவும், அச்சேவை கட்டண விதிப்பை வணிகர்கள் தான் செலுத்தவேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு தமிழகம் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலும் வணிகர்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாகி இருக்கின்றது.
இதனால் வணிகர்கள் பாதிப்படைவதோடு மட்டுமன்றி, விலைவாசியும் கடுமையாக உயர்ந்து, பொது மக்கள் பாதிக்கப்படும் நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே யு.பி.ஐ. சேவை கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் 61 மாவட்டத் தலைவர்கள் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய நகர் பகுதிகளில் இன்று பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் கலவைத் தெருவில் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வணிகர்களுக்கு பேட்ஜ் வழங்கி அறவழி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த போராட்டத்தில் மாநில தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநிலத் துணைத்தலைவர் எம்.எஸ்.பஷீர் அகமது, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சாமுவேல், செயலாளர் ஏ.ஷேக் முகைதீன், பொருளாளர் ஏ.சத்தியரீகன், மற்றும் மத்தியசென்னை மாவட்ட துணை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.