

குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி வரும் கரடிகளை கூண்டு வைத்துப்பிடித்து, பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பொதுமக்கள் அதிகளவில் கூடும் நகர்ப்புற பகுதிகளிலும் கரடிகள் உலா வருவதால் மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கோத்தகிரி நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள போலீஸ் நிலையம் அருகே கரடி ஒன்று உலா வந்தது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து போலீஸ் நிலைய பகுதியை கடந்து சென்ற கரடி, அருகிலுள்ள அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்தது. இதனை கண்ட நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அச்சத்தில் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். சிறிது நேரம் மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி, பின்னர் அங்கிருந்து வெளியேறி அருகிலுள்ள சோலை பகுதிக்குள் சென்றது. இதனால் போலீஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி நகரில் குடியிருப்புகள், சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் இருப்பதால், பள்ளி மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே வனத்துறையினர் கோத்தகிரி நகர்ப்பகுதியில் கரடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். மேலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி வரும் கரடிகளை கூண்டு வைத்துப்பிடித்து, பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.