

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சஞ்சய் (12), ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்து மாலை 5 மணியளவில் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிய சஞ்சய், சீருடையை மாற்றிவிட்டு டியூஷனுக்குச் செல்வதற்காக புத்தகப் பையுடன் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த பெற்றோர், டியூஷனுக்குச் சென்று விசாரித்தபோது, சஞ்சய் அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் சஞ்சய் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் திருநாவுக்கரசு சிங்காரப் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, புத்தகப் பையுடன் சஞ்சய் இருசக்கர வாகனத்தில் செல்வது பதிவாகியிருந்தது.
இதையடுத்து, அந்த வாகனத்தில் சென்ற நபரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், மிட்டப்பள்ளியில் மாணவனுக்கு லிப்ட் கொடுத்து ஊத்தங்கரை நான்கு ரோடு பகுதிக்கு அழைத்து வந்ததாகவும், அங்கிருந்து ஊத்தங்கரையில் உள்ள ஜிம்முக்குச் செல்லும் வழியில் மாணவனை இறக்கி விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சிங்காரப்பேட்டை, மிட்டப்பள்ளி, ஊத்தங்கரை, காரப்பட்டு, அனுமந்தீர்த்தம், சாமல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இருப்பினும், மாணவன் குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
காலாண்டுத் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் கண்டித்தார்களா? இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் வீட்டைவிட்டு வெளியேறினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பள்ளி மாணவன் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், பெற்றோரிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் சஞ்சயை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.