நகை கொள்ளைக்கு பிறகு... ‘யூடியூபர்’ மதுமிதா வெளியிட்ட 10 வீடியோக்கள் 1½ கோடி பார்வையாளர்களை கவர்ந்தது

கொள்ளை சம்பவத்திற்கு முன்னதாக மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6669 வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.
 madhumitha
Published on: 
Summary

கொள்ளை நடந்த சில மணி நேரங்களில் அவர், 10 வீடியோக்களைத் தனது இன்ஸ்டாபக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதிலும் அவர் தன் மீது பணத்தைக் கொட்டிக்கொண்டு நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

நாகர்கோவில் அனந்த நாடார் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி மதுமிதா. யூடியூபர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மதுமிதா உடல் முழுவதும் நகைகள், கை நிறைய பணக்கட்டுகள் ஆகியவற்றுடன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். இந்த நிலையில் இவர்கள் குடும்பமாக வெளியே சென்றிருந்தபோது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த 118 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

சி.சி.டி.வி.கேமராவில் சிக்கிய உருவம்

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்சுல் நாகர் உத்தரவின்பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளையர்களை பிடிக்கப் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு சி.சி.டி.வி. கேமராவில், மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து, முதுகில் பையை மாட்டிக்கொண்டு வாலிபர் ஒருவர் செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது.

போலீசார் தீவிர விசாரணை

அதனை அடிப்படையாக கொண்டு, அப்பகுதியில் உள்ள 600-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்தனர். இதில் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அந்த வாலிபர் தோட்டியோடு வரை செல்வது போன்ற காட்சிகள் சிக்கியுள்ளன. அதன் பிறகு, அந்த நபர் நான்கு வழிச்சாலை வழியாக செல்வது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன. அவற்றின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சந்தேகத்திற்கிடமான 2 பேரை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 madhumitha

1½ கோடி பேர் பார்த்தனர்

கொள்ளை சம்பவத்திற்கு முன்னதாக மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6669 வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து தூண்டப்பட்டே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கொள்ளை நடந்த சில மணி நேரங்களில் அவர், 10 வீடியோக்களைத் தனது இன்ஸ்டாபக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதிலும் அவர் தன் மீது பணத்தைக் கொட்டிக்கொண்டு நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

வீடியோ

அதில் ஒரு வீடியோவை மட்டும் 40 மணி நேரத்தில் 39 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதுபோக, மதுமிதா பதிவேற்றம் செய்துள்ள மற்றொரு வீடியோவை 20 லட்சம் பேரும், மற்றொரு வீடியோவை 15 லட்சம் பேரும், இன்னுமொரு வீடியோவை 11 லட்சம் பேரும் பார்த்துள்ளனர். மொத்தத்தில் அவரது 10 வீடியோவை பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை 1½ கோடியை எட்டியுள்ளது.

மதுமிதா

மேலும் மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கொள்ளை சம்பவத்திற்கு முன்பு 3 முதல் 3¼ லட்சமாக இருந்த பாலோயர்ஸ் (பின் தொடர்பவர்கள்) தற்போது 5 லட்சத்தை நெருங்கி வருகிறது. ஆனால் மதுமிதா யாரையும் பின்தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com