

மதுமிதா வீட்டு கொள்ளை சம்பவத்தில் வட மாநில கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது33). இவர் ஏலக்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மதுமிதா(28) பிரபல யூடியூபர் ஆவார். அவர் யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களிலும் கணக்கு வைத்திருக்கிறார். அதில் வெளியிடும் வீடியோக்களின் மூலம் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றிருக்கிறார்.
வினோத்குமார் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள தம்மத்துகோணம் பகுதியில் வீடு வாங்கிக் குடியேறினார். நேற்று முன்தினம் மாலை வினோத்குமார் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி-குழந்தையுடன் நெல்லைக்கு ஷாப்பிங் சென்றார்.
பின்னர் இரவில் வீடு திரும்பியபோது, அவர்களது வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, வினோத்குமார்- மதுமிதா தம்பதியினர் அருகில் உள்ள மரவேலை செய்யும் தொழிலாளி ஒருவரை வரவழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும் படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 118 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்சுல் நாகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
கொள்ளையர்களை அடையாளம் காணுவதற்காக மதுமிதா வீட்டின் அருகாமையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் வாலிபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுமிதா தனது சமூக வலைதள பக்கங்களில் தன்னிடம் ஏராளமாக பணம்-நகைகள் இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் வகையில் கையில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகளுடன் இருப்பது போன்றும், பணமழையில் நனைவது போன்றும் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து நூற்றுக்கணக்கான வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில வெளியிட்டுள்ளார்.
அதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரது வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் கருதினர். அந்த கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மதுமிதா வீடு இருக்கும் பகுதியில் ஏராளமான வலை கம்பெனிகளும், பிளாஸ்டிக் கம்பெனிகளும் உள்ளன. அங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இதனால் மதுமிதா வீட்டில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாமோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் கட்டிங் மிஷினை பயன்படுத்தி மதுமிதா வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர். வழக்கமாக வடமாநில கொள்ளையர்கள் தான், இதே போன்ற முறைகளில் கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம்.
இதனால் மதுமிதா வீட்டு கொள்ளை சம்பவத்தில் வட மாநில கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.