'ரீல்ஸ்' பார்த்து கொள்ளையடித்தேன் - யூடியூபர் வீட்டில் 118 பவுன் நகையை கொள்ளையடித்த வாலிபர் வாக்குமூலம்

கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
Woman YouTuber
Published on: 
Summary

குமரியில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் நகையை கொள்ளையடித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெண் 'யூடியூபர்'

நாகர்கோவில் அருகே உள்ள அனந்த நாடார்குடியிருப்பு பகுதி யில் வசித்து வருபவர் வினோத்குமார்(வயது 33), தொழில் அதிபர். இவரது மனைவி மதுமிதா(28). பிரபல யூடியூபரான இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான ஆடைகள், நகைகள் அணிந்தும், பணமழையில் நனைவது போன்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி மாலை மதுமிதா அவரது கணவருடன் துணி எடுக்க காரில் திருநெல்வேலிக்கு சென்றனர். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் அவரது வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த 118 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படைகள் அமைப்பு

தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் மர்ம ஆசாமிகள் 2 பேர் 'ஹெல்மெட்' மற்றும் முககவசம் அணிந்து டெலிவரி பையுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகள் வெவ்வேறு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.

இதை வைத்து, மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 600-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் மதுமிதாவின் வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சிக்கிய மர்ம ஆசாமிகளில் ஒருவர் பார்வதிபுரம் நோக்கி செல்கிறார். இன்னொருவர் திருநெல்வேலி மார்க்கமாக தப்பி செல்கிறார்.

வாலிபர் கைது

இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மதுமிதா வீட்டில் கொள்ளையடித்ததாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் இசக்கிபாண்டி (30) என்ற வாலிபரை பிடித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ரீல்ஸ் வீடியோ

மதுமிதாவின் ரீல்ஸ் வீடியோக்களை பார்த்து தான் இசக்கிபாண்டி திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக கூறியுள்ளாராம். பின்னர் இந்த கொள்ளை தொடர்பாக இசக்கிபாண்டியனை கைது செய்தனர்.

அதே சமயத்தில் இந்த கொள்ளையில் இசக்கி பாண்டியனுக்கு யாரெல்லாம் உதவி செய்தார்கள்? எனவும் அவருடன் வந்த மற்றொரு ஆசாமி யார்? எனவும் விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com