போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் குத்திக்கொலை- ஊழியர்கள் 2 பேர் கைது

போலீசார் விரைந்து வந்து நிஷாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட நிஷாந்த்
கொலையுண்ட நிஷாந்த்
Published on: 
Summary

வழக்குப்பதிவு செய்து பாபு, சிவகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மாங்காடு சக்கரா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான போதை மறு வாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருவொற்றியூரை சேர்ந்த நிஷாந்த் (வயது23) என்பவர் கடந்த 6 மாதங்களாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இதே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று திருந்தி இங்கேயே பாபு, சிவகுமார் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

தகராறு

இவர்கள் இருவரையும் நிஷாந்த் அடிக்கடி அவதூறாக பேசியதாகவும், அவர்களின் குடும்பத்தை பற்றி ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று இரவும் அவர்களுக்கு இடையே இது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாபு, சிவகுமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து நிஷாந்தை தாக்கினர்.

கொலை

மேலும் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்துவந்து நிஷாந்தின் கழுத்தில் சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த நிஷாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நிஷாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கைது

மேலும் வழக்குப்பதிவு செய்து பாபு, சிவகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 30க்கும் மேற்பட்டோர் காவலாளியை தாக்கி விட்டு தப்பித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com