

பிரிந்து சென்ற மனைவியை அழைத்துச் செல்ல வந்த கணவனை அவரது மைத்துனரே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பரங்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது30), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும் குன்றத்தூர் அருகே உள்ள வழுதிலம்பேட்டை சேர்ந்த பிரதிபா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அருண்பாண்டியனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து பிரதிபா கடந்த 1½ ஆண்டுகளாக கணவரை பிரிந்து வழுதலம் பேட்டில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு அருண்பாண்டியன் சமாதானம் பேசி மனைவியை குடும்பம் நடத்த அழைத்துச் செல்வதற்காக மனைவியின் வீட்டிற்கு வந்தார்.
அங்கு அருண்பாண்டியனுக்கும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பிரதிபாவின் தம்பி பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கடேசன், வேலு ஆகிய 3 பேரும் சேர்ந்து அருண்பாண்டியனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த அருண்பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருமுடிவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அருண்பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து பிரவீன், வெங்கடேஷ், வேலு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரிந்து சென்ற மனைவியை அழைத்துச் செல்ல வந்த கணவனை அவரது மைத்துனரே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.