

தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 200 பாரம்பரிய நெசவாளர்களை ஒருங்கிணைத்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார்.
சொகுசு கார், நீச்சல் குளத்துடன் கூடிய பங்களா, கை நிறைய சம்பளம் தரும் ஐ.டி., வேலை என நவீன இளைஞர்களின் கனவுகளோடு வலம் வந்தவர் ஈரோடு, சென்னிமலையை சேர்ந்த சிவகுருநாதன். ஆனால், இயற்கை மீதான தேடலும் காந்திய சிந்தனைகளும் அவரை மென்பொருள் துறையிலிருந்து வேரோடு பெயர்த்து, பராம்பரிய கைத்தறி நெசவு உலகிற்கு அழைத்து வந்துள்ளன.
எம்.பி.ஏ., முடித்து விட்டு பெங்களூருவில் மென்பொருள் (ஐடி) துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர் சிவகுருநாதன். பள்ளிப் பருவத்தில் ஒரத்துப்பாளையம் அணையின் மாசடைந்த தண்ணீரைப் பார்த்தது முதல், சூழல் குறித்த கேள்விகள் அவருக்குள் இருந்தன. ஒரு கட்டத்தில் ‘மழைநீர்’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய ‘மண்புழு’ என்ற சிற்றிதழ் இவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியது.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உரை, ‘குக்கூ’ காட்டுப் பள்ளியின் நட்பு, எழுத்தாளர் ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ புத்தகம் ஆகியவை இவரை சமூகத்தை நோக்கித் திருப்பியது.
2016-ல் தனது ஐடி., வேலையை ராஜினாமா செய்த சிவகுருநாதன், தனது மனைவி அளித்த ஊக்கத்துடன் கைத்தறி களத்தில் இறங்கினார். கர்நாடகாவில் உள்ள மேல் கோட்டையில் காந்தியவாதி சுரேந்திர கவுலாகி மற்றும் அவரது மகன் சந்தோஷ் கவுலாகி ஆகியோரின் வழிகாட்டுதல் இவருக்குக் கிடைத்தது. வெளி இடங்களில் துணிகளை வாங்கி விற்பதை விட, உங்கள் ஊரில் நலிவடைந்து கிடக்கும் நெசவாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நியாயமான கூலி கொடுங்கள் என்ற அறிவுரையை ஏற்று சென்னிமலை, காங்கேயம், கரூர், திண்டுக்கல், மதுரை பகுதிகளில் களமிறங்கினார்.
அங்கு மூத்த நெசவாளர்களை ஒருங்கிணைத்து, தேவையான நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களை வழங்கி, அவர்கள் கேட்கும் நியாயமான கூலியைக் கொடுத்து ஆடைகளை நெசவு செய்ய வைத்தார். ‘நூற்பு’ என்ற பெயரில் இணையதளம் மூலம் வேட்டி, சேலை, துண்டு, சட்டைகளை விற்பனை செய்யத்துவங்கினார்.
தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 200 பாரம்பரிய நெசவாளர்களை ஒருங்கிணைத்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார்.
துணிகளை விற்பனை செய்வதோடு நின்று விடாமல், இக்கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக 2017-ல் அரச்சலூரில் கைத்தறி நெசவையும், ராட்டையில் நூல் நூற்கும் பயிற்சியையும் சிவகுருநாதன் முறைப்படி கற்றுக்கொண்டார்.
2024-ல் நண்பர்களுடன் இணைந்து ‘நூற்பு கைத்தறிக் கூட்டமை’ என்ற அமைப்பைத் துவங்கி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். பஞ்சிலிருந்து நூல் நூற்று துணியாக மாறும் வியத்தகு உழைப்பைப் பார்க்கும் குழந்தைகள் மத்தியில், ‘தேவைக்கு மட்டுமே ஆடைகளை வாங்கும்’ நுகர்வுக் கலாசார மாற்றம் ஏற்படுவதாக சிவகுருதான் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
சமூகப் பணி என்பது ஓடும் ஆற்று நீர் போன்றது, அதில் நாம் எந்த அளவிற்கு ஆத்மார்த்தமாக ஒரு கை நீரைக் கொண்டு சென்று சேர்த்தோம் என்ற திருப்தியே முக்கியம் எனக்கூறும் சிவகுருநாதன்.
இயந்திரத் தறியின் வேகத்திற்கு கைத்தறியால் ஈடுகொடுக்க முடியாது தான். ஆனால் இயற்கையை நேசிக்கும் மக்களுக்காகவும், பாரம்பரிய நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் யாராவது ஒருவர் இக்கலையைக் கையில் பிடித்து வைத்திருக்க வேண்டும். இந்த உழைப்பு தரும் ஆத்மார்த்த திருப்தியே என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது" என்கிறார் இந்த நவீன காந்தியவாதி.