

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள பொழிக்கரை சுண்ணாம் புக்கல் தெருவை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மகன் சிவா(வயது 21).
இவர் அதே பகுதியில் ரேடியோ செட் வைத்து நடத்தி வரும் கமலநாதன் என்பவரது மகளை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு தற்போது தான் 18 வயது நடக்கிறது என்ற நிலையில், சிவா அந்த இளம்பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
மேலும் அவரது பெற்றோரிடம், இளம்பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனை கமலநாதன் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்கள் குடும்பத்திற்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கமலநாதன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு குடும்பத்தினர் அனைவரும் தூங்க சென்றுவிட்டனர்.
திடீரென நள்ளிரவில் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. ஆனால் அதனை கமலநாதன் கண்டுகொள்ளவில்லை. மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அவரது வீட்டு காம்பவுண்டுக்குள் கண்ணாடி பாட்டில் துகள்கள் சிதறி கிடந்தன. மேலும் பெட்ரோலும் பரவி கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சேரன்மகாதேவி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் தனக்கு திருமணம் செய்து கொள்ள இளம்பெண்ணை கட்டித்தர மறுத்துவிட்டதால் ஆத்திரத்தில் சிவா, பெட்ரோலை பாட்டிலில் நிரப்பி பெட்ரோல் குண்டாக கமலநாதன் வீட்டுக்குள் வீசியதும், ஆனால் வீசிய வேகத்தில் தீப்பற்றாமல் அது வெடிக்காத குண்டாக போனதும் தெரியவந்தது. இதையடுத்து சிவாவை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.