உச்சிப்பிள்ளையார் கோவில் பாறையில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

தற்கொலை மிரட்டல் விடுத்த அந்த ஆசாமி அதே இடத்தில் சாய்ந்து விட்டார்.
உச்சிப்பிள்ளையார் கோவில் பாறையில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
Published on: 
Summary

தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கயிறு மூலம் அவரை மீட்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கயிறை பிடித்து மேலே வர மறுத்து விட்டார்.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு மாலை நேரத்தில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் மலை உச்சியில் இருக்கும் பக்தர்கள், பொது மக்கள் மற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் கீழே இறங்கி வருவார்கள். பின்னர் இரவு 9 மணி அளவில் மலை மீது ஏறி செல்லும் படிக்கட்டு கதவுகள் அடைக்கப்படும்.

தற்கொலை மிரட்டல்

நேற்று இரவு பக்தர்கள் அனைவரும் கீழே இறங்கிய பின்னர் ஊழியர்கள் மலை மீது வேறு யாரேனும் இருக்கிறார்களா? என சோதனை செய்தனர் . அப்போது குடைவரை கோவில் அருகே உள்ள பாறையில் ஒருவர் அமர்ந்திருப்பதை கண்டு, கீழே வரும்படி அழைத்தனர். ஆனால் அவர் வரமறுத்ததுடன் சிலர் தன்னைக் கொல்ல வருவதாகவும் அதனால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறினார்.

மீட்க முயற்சி

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நெருங்கிச் சென்ற போது, கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். அதைத்தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கயிறு மூலம் அவரை மீட்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கயிறை பிடித்து மேலே வர மறுத்து விட்டார். பின்னர் இரவு 11 மணி அளவில் போலீசாரிடம் பேசிய அவர், ஒரு மணி நேரத்துக்கு பின்னர் தானாக கீழே இறங்கி வருவதாகவும், அதுவரை தன்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் கூறினார்.

அதன்படி போலீசாரும் அங்கு காத்திருந்தனர். பின்னர் சற்று நேரத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த அந்த ஆசாமி அதே இடத்தில் சாய்ந்து விட்டார். உடனே தீயணைப்புத் துறையினர் அசந்து தூங்கி இருக்கலாம் என கருதி அருகே சென்றனர். உடனே எழுந்து விட்ட அந்த நபர் மீண்டும் ஆபத்தான பகுதிக்கு சென்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். பின்னர் இரவு 12-45 மணிக்கு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் நாசுக்காக அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து பேச்சு கொடுத்து கை கால்களை கட்டி மீட்டனர். 4 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் அந்த நபர் மீட்கப்பட்டார்.

செல்போன் நிறுவன ஊழியர்

அவர் கோவை சூலுரை சேர்ந்த செந்தில் என்பதும், தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவருக்கு திருமணமாகி மனைவி விவாகரத்தாகி பிரிந்து சென்று விட்டார். குழந்தைகள் இல்லை. சமீப காலமாக சற்று மன அழுத்தத்தில் இருந்த செந்தில் 2 தினங்களுக்கு முன்பு தனது தாயாரிடம் சீரடி செல்வதாக கூறி சென்றுள்ளார். பின்னர் திருச்சி வந்து மலைக்கோட்டையில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது.

Related Stories

X