

கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டியைச் சேர்ந்தவர் அமலதாஸ் (வயது 45). இவரும் இவரது உறவினர்களான வாடிப்பட்டி அருகே உள்ள குரங்கு தோப்பைச் சேர்ந்த நாகேந்திரன், சிறுமலை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அக்கினி ஆகிய 3 பேர்களும் மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள தேத்தூரைச் சேர்ந்த கணேசன் என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இவரது தோட்டம் சிறுமலை அடிவாரப் பகுதியில் உள்ளது. தோட்ட வேலைக்காக அமலதாஸ், நாகேந்திரன், அக்கினி ஆகிய 3 பேரும் சென்றிருந்தபோது கணேசனுக்கு சொந்தமான ரூ.7 லட்சம் பணம் திருடு போனது. இதனை அமலதாஸ் மற்றும் அவரது நண்பர்கள்தான் திருடியதாக கணேசன் சந்தேகமடைந்தார். இதனால் 3 பேரையும் கடத்திச் சென்று சோழவந்தான் அருகே வைத்து கணேசன் மற்றும் அவரது நண்பர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்கள் பணத்தை எடுக்கவில்லை என மீண்டும் மீண்டும் கூறியதால் வேறு வழியின்றி நிலக்கோட்டை கரியாம்பட்டியில் காரில் கொண்டு வந்து நேற்று இரவு இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
அதேபோன்று அக்கினியும், நாகேந்திரன் அவரது வீட்டில் காரில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்றனர். இதில் காயமடைந்த அமலதாஸ் நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து பின்னர் வீட்டிற்கு சென்று விட்டார். ஆனால் வீட்டில் அமர்ந்து இருந்த போது திடீரென மயக்கம் ஏற்பட்டு அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு வந்தனர். அமலதாஸ் இறந்ததை உறுதி செய்த டாக்டர்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதேபோன்று நாகேந்திரன் மற்றும் அக்கினி ஆகிய 2 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சிறுமலையில் எஸ்டேட் உரிமையாளர் கணேசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தொழிலாளிகளை அடித்து சித்திரவதை செய்ததால்தான் அமலதாஸ் இறந்துள்ளார் என்று நிலக்கோட்டை போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சம்பவம் நடந்த இடம் சோழவந்தான் என்பதால் இதுகுறித்து சோழவந்தான் போலீசாருக்கு நிலக்கோட்டை போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.