

பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் பாபுவின் இறப்பிற்கு உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.
புதுவை மாநிலம் ரெயின்போ நகரை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் மரக்காணம் அருகே தேவிகுளம் பகுதியில் இறால் பண்ணை நடத்தி வருகிறார். இந்த இறால் பண்ணையில் கிளியனூர் வட்டம் காட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்த உமாபதி மகன் பாபு (22). கடந்த ஒரு மாதமாக கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இறால் பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மின்சார வயர் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த வயரை சரி செய்யும் பணியில் பாபு ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பாபு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து பாபுவின் உறவினர்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு வந்து பாபுவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி புகார் கொடுத்தனர். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் பாபுவின் இறப்பிற்கு உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.