

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஆபத்தான இடங்கள் கண்டறியப்பட்டு சுமார் 5000-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 23-ந்தேதி பெய்த கனமழையால் குன்னூர் மற்றும் கோத்தகிரி மலைப்பாதையில் பாதிப்பு ஏற்பட்டது. இதில் கோத்தகிரி பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளை மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றப்பட்டு அந்த வழியாக போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண் மற்றும் பாறைகள் விழுந்துபெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இன்று வரை சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் குன்னூர் மலைப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அனைத்து வாகனங்களும், கோத்தகிரி மார்க்கமாக திருப்பிவிடப்பட்டுள்ளதால் இந்த வழித்தடத்தில் வாகன நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் கோத்தகிரியில் இருந்து குஞ்சப்பனை வரை உள்ள இடங்களில் மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகன் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஆபத்தான இடங்கள் கண்டறியப்பட்டு சுமார் 5000-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் அச்சமின்றி பயணம் செல்லும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அப்போது பொறியாளர் ரமேஷ் உடனிருந்தார்.