

காதலன் லோகேசை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை சரிதாவின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்த மூப்பன்வலசை கிராமத்தை சேர்ந்தவர்கள் கோபால்-மணிமேகலை. இவர்களது மூத்த மகள் சரிதா. பி.எஸ்சி. பட்டதாரி.
பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவருடன் சரிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் ஜோடியாக சுற்றித்திரிந்துள்ளனர். அப்போது நெருக்கமாக இருப்பது போன்று செல்போனில் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.
காதலன் லோகேஷின் நடத்தை சரி இல்லாததை அறிந்த சரிதா அவருடன் இருந்த காதலை வெறுத்தார். லோகேஷின் செல்போன் அழைப்புகளையும் தவிர்த்தார். அவரிடம் இருந்து முழுவதுமாக விலகினார்.
இந்த நிலையில் சரிதாவுக்கு ஏர்வாடி அருகேயுள்ள மெய்யன் வலசை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். அதற்கு சரிதாவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. அவர்களுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
தன்னை விட்டு வேறொருவரை சரிதா திருமணம் செய்யப்போவதை அறிந்த லோகேஷ் ஆத்திரம் அடைந்தார். சரிதாவிடம் பேசிய அவர், உன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்புவேன். அவ்வாறு செய்யக்கூடாது என்றால் நான் கேட்கும்போதெல்லாம் நீ பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அதற்கு சரிதா ஒப்புக்கொள்ளாததால் லோகேஷ், சரிதாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக தெரிகிறது.
மேலும் அந்த புகைப்படத்தை சரிதா திருமணம் செய்துகொள்ள இருந்த மணமகனுக்கும் அனுப்பி உள்ளார். அதை பார்த்த மாப்பிள்ளை உடனடியாக திருமணத்தை நிறுத்துமாறு தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து மணமகன் வீட்டார், சரிதாவின் பெற்றோரை செல்போனில் அழைத்து இந்த திருமணம் நடக்காது என்று கூறியதுடன், அவரது செயல்பாடுகள் குறித்து புகார்களையும் தெரிவித்துள்ளனர். இதனால் சரிதாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திருமணம் நின்று விட்டதாக உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
திருமணத்திற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்த உறவினர்கள் திருமணம் நின்று போனதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையே திருமணம் நின்று போனதால் அவமானம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்த சரிதா நேற்று வீட்டு அறையின் கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காதலன் லோகேசை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை சரிதாவின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.
இதற்கிடையே தலைமறைவான லோகேசை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.