காதலியை அரிவாளால் வெட்டிக் கொன்ற வாலிபர் லாரி முன் பாய்ந்து தற்கொலை

இருவரின் நண்பர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காதலி திவிஜாஸ்ரீ , பிரதீப்
காதலி திவிஜாஸ்ரீ , பிரதீப்
Published on: 
Summary

காதலர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், ஓசூரில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே பொன்னேரியை அடுத்த ராமனூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் திவிஜாஸ்ரீ (21). இவர் ஓசூரில் உள்ள பிரபல தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வந்தார். இதேபோல், ஜோலார்பேட்டை அருகே சின்ன வேப்பம்பட்டியைச் சேர்ந்தவர் மணியரசன். இவருடைய மகன் பிரதீப் (25). இவர் ஓசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். தொழிற்சாலை அருகே அறை எடுத்து தங்கியிருந்தார். திவிஜாஸ்ரீயும், பிரதீப்பும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அறையில் தகராறு

இந்த நிலையில், நேற்று இரவு திவிஜாஸ்ரீயை பிரதீப் தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக் கிடையே திடீரென தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம்

தொடக்கத்தில் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சிறிது நேரத்தில் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த பிரதீப், அறையில் இருந்த அரிவாளை எடுத்து திவிஜாஸ்ரீயை சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த திவிஜாஸ்ரீ ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சிறிது நேரத்தில் திவிஜாஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

லாரி முன் பாய்ந்து தற்கொலை

காதலி உயிரிழந்து கிடப்பதைக் கண்ட பிரதீப் அதிர்ச்சியடைந்ததாக தெரிகிறது. காதலி ரத்த வெள்ளத்தில் இறந்ததை கண்ட பிரதீப் மனம் பதறினார். அய்யோ! காதலியை கொன்று விட்டோமே என்று கதறி அழுதபடியே அறையை விட்டு வெளியே ஓடி வந்தார். அங்கு ஓசூர் - பாகலூர் சாலையில் அந்த வழியாகச் சென்ற லாரியின் முன்பு பிரதீப் திடீரென பாய்ந்தார். இதில் லாரி மோதி தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

அரசு மருத்துவமனை

இதைக் கண்ட அப்பகுதி மக்கள், பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி பிரதீப் உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதற்கிடையே, காதலியை வெட்டிக்கொலை செய்து விட்டு வாலிபர் லாரி முன் பாய்ந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் விரைந்து வந்தனர்.

பிரதீப் தங்கியிருந்த அறையில் உயிரிழந்து கிடந்த திவிஜாஸ்ரீயின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோத னைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகராறுக்கான காரணம் என்ன?

காதலர்கள் இருவரும் நேற்று இரவு பேசிக்கொண்டிருந்தபோது திடீரென தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்களுக்கிடையே என்ன பிரச்சினை ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

காதலியை வெட்டிக் கொலை செய்துவிட்டு பிரதீப் லாரி முன் பாய்ந்ததற்கான காரணம் குறித்தும், தகராறுக்குப் பின்னணியில் வேறு ஏதேனும் பிரச்சினை இருந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலர்கள்

இதற்காக இருவரின் நண்பர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காதலர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், ஓசூரில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com