

த.வெ.க. அரசு ரீல்ஸ் விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடுதான் விளையாடுமா?
பண்ருட்டியில் முதல்வர் மருந்தகப் பெண் ஊழியர் மீது நடந்துள்ள கத்திக்குத்துச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பட்டப்பகலில் கொலைகளும், வெட்டுக்குத்துகளும் நடப்பது சர்வசாதாரணாமாகிவிட்டது.
பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், ஏன் சிறைக் கைதிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை எனும் நிலையைத் தமிழ்நாட்டில் உருவாக்கி சட்டம் ஒழுங்கை தினமும் சர்வ நாசம் செய்து கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு.
பண்ருட்டி சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும். குற்றவாளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பதில் தாமதிக்காமல் இனியாவது இந்தப் பொறுப்பற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? இல்லை ரீல்ஸ் விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடுதான் விளையாடுமா?
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் முதல்வர் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகம் வடகைலாசம் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வருகிறது.
இங்கு காடாம்புலியூர் அடுத்த புறங்கணியை சேர்ந்த திவ்யா (23) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல வேலைக்கு வந்தார். மருந்தகத்தை திறந்து பணியில் இருந்தார். அப்போது அங்கு அதே கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (30) என்பவர் வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக குத்தினார். இதில் அந்த பெண்ணுக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
வலியால் அலறி துடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அருகே இருந்த ஊழியர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது அங்கு இளம்பெண் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார். அருகே அந்த வாலிபர் நின்றிருந்தார்.
உடனடியாக அவர்கள், அந்த வாலிபரை பிடித்து வைத்து கொண்டு காடாம்புலியூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.