பிரசவத்தின்போது பெண் திடீர் மரணம்- உறவினர்கள் முற்றுகை போராட்டம்

குடும்பத்தினரும் உறவினர்களும், மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினர்.
ஆஸ்பத்திரி முன்பு  போராட்டம் நடத்திய உறவினர்கள்
ஆஸ்பத்திரி முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய உறவினர்கள்.
Published on: 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாட்சியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு, சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 26). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா 2-வது முறையாக கர்ப்பமானார். இதையடுத்து அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காகச் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவ மனை

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நேற்று காலை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை ஐஸ்வர்யாவிற்குப் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற ஒரு மணிநேரத்துக்குள் ஐஸ்வர்யாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

உயிரிழப்பு

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் உறவினர்களும், மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று இரவு உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தின் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார்

இதுகுறித்து தகவலறிந்த விருதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்ததை நடத்தினர். இதையடுத்து முற்றுைக போராட்டம் கைவிடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com