மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கிய காட்டு யானை- உயிர் தப்பிய வாலிபர்

கரும்பு லாரிகளை குறிவைத்து யானைகள் வருவது தொடர்கதை ஆகி வருகிறது
மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கிய காட்டு யானை- உயிர் தப்பிய வாலிபர்
Published on: 
Summary

வனச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும், குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எந்த காரணம் கொண்டும் வனப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன.

தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே கிராமத்துக்குள் நுழைவதும், தேசிய நெடுஞ்சாலையோரம் முகாமிட்டு அந்த வழியாக வரும் வாகனங்களை வழிமறிப்பதும் தொடர்கதை ஆகி வருகிறது.

கடம்பூர் வனப்பகுதி

இந்த நிலையில் கடம்பூர் வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென புதருக்குள் இருந்து சாலைக்கு ஒற்றை யானை வந்தது. பெரிய தந்தங்களுடன் பார்க்கவே பயமுறுத்தும் வகையில் பெரிய உருவத்தில் இருந்த யானை திடீரென வந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். அப்போது அந்த ஒற்றை யானை அவர் நபர் அருகே வந்து விட்டது.

செல்போனில் வீடியோ

இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த யானை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் மோட்டார் சைக்கிளை தும்பிக்கையால் அடித்து நொறுக்கியது. பின்னர் அந்த பகுதியை சுற்றி வந்த யானை சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகு அந்த நபர் மோட்டார் சைக்கிளை எடுத்து அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த காட்சிகள் அனைத்தையும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

சமூக வலைத்தளம்

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே கடம்பூர், திம்பம், தாளவாடி, ஆசனூர், காரப்பள்ளம் பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது, கரும்பு லாரிகளை குறிவைத்து யானைகள் வருவது தொடர்கதை ஆகி வருகிறது, எனவே வனச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும், குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எந்த காரணம் கொண்டும் வனப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com