

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவது ஏன் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் ஆளும் எந்த மாநிலங்களிலும் இதுதொடர்பாக எந்த ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,
“தமிழ்நாட்டில் மட்டும் தொகுதி மறுவரையறை தேவையில்லை எனும் நாடகம் ஏன்? தங்கள் பதிலி அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ், தான் ஆளும் நான்கு மாநிலங்களில் ஏன் அமைதியாக இருக்கிறது? தொகுதி மறுவரையறையை ஆதரித்த ரேவந்த் ரெட்டி அவர்களைக் கேள்வி கேட்கத் துணியுமா?
த.வெ.க. அரசைத் தூண்டிவிட்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் கூட்டம் என்று நாடகமொன்றை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?
நியாயமான தொகுதி மறுவரையறை என்ற நிலைப்பாட்டிலிருந்து தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று அடித்திருக்கும் பல்டி தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா?
அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் இப்படியான எம்.பி.க்கள் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை?
தொகுதி மறுவரையறை தேவையில்லை என்று இங்கு நாடகமிடும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்களில் ஒருவரான ரேவந்த் ரெட்டி, தொகுதி மறுவரையறை நடந்தால் தெலங்கானா மாநிலத்தின் பிரதிநித்துவம் அதிகரிக்கும் என்று பேசியிருப்பது ஏன்?
தொகுதி மறுவரையறையில் தெளிவான நிலைப்பாடின்றி இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் செய்வது அற்ப அரசியல் அன்றி வேறல்ல.
நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் பதிலி அரசை நடத்திக் கொண்டிரும் ரீல்ஸ் கட்சியின் ரீல்களை மக்கள் நம்பமாட்டார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.