

சிறுமிகள் பாலியல் வழக்கில் ஜெம் வீரமணி மீதான விசாரணை தீவிரமாகி, முன்னாள் கமிஷனர் அருண் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வு குழு கேள்விகள் எழுப்பி விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் பல பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுமிகள் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான வழக்கு விசாரணை தீவிரமாகி உள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அருண் பொறுப்பில் இருந்த போது தான் இந்த விவகாரம் முதலில் வெளியில் வந்துள்ளது. ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் அத்துமீறல் செய்த வீடியோக்களை முழுமையாக ஆய்வு செய்யாமல் அதில் இருப்பது யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அப்போது தெரிவித்துவிட்டதாகவும் அதன் காரணமாகவே வீரமணி கைது நடவடிக்கையில் இருந்து தப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் அவரை கைது செய்யாமல் இருப்பதற்காக போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் ஒருங்கிணைந்து செயல்பட்டு கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாகவும் திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
இதனை தொடர்ந்து தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையை பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிப்பார்கள் என்று அறிவித்தது.
இதன்படி கூடுதல் கமிஷனர் தேன்மொழி தலைமையிலான நான்கு பெண் போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையை வேகப்படுத்தி இருக்கிறார்கள்.
ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமாரிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வீரமணி வழக்கு தொடர்பாக சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் அப்போது சென்னையில் கூடுதல் கமிஷனாக பணியாற்றி கோவையில் கமிஷனர் ஆக பணியாற்றி வந்த கண்ணன் ஆகியோரிடமும் கூடுதல் கமிஷனர் ராதிகா மற்றும் துணை கமிஷனர் வனிதா ஆகியோரிடமும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையின் போது 60க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு போலீசாருக்கு எழுந்து உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் மேற்கொண்டு உள்ளனர்.
சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தி முதல் கட்ட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
தற்போது போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் பல தகவல்களையும் அவர்கள் திரட்டி வைத்துள்ளனர். இந்த தகவல் அடங்கிய அறிக்கையை வருகிற 27ஆம் தேதி சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.
இதன் மூலம் ஜெம் வீரமணி வழக்கில் மேலும் பல பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுமிகள் மீதான பாலியல் வழக்கில் வீரமணி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளரான வீரமணி அவருடைய கூட்டாளிகள் என மொத்தம் ஏழு பேர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜெம் வீரமணி மற்றும் அவருடைய கூட்டாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஜெம் வீரமணி மீது ஆறு போக்சோ மற்றும் ஒரு தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் எட்டாவதாக மேலும் ஒரு போக்சோ வழக்கு வீரமணி மீது பதிவு செய்யப்பட்டது.