தஞ்சையில் நடந்தது என்ன? வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் முதலில் தாக்கினாரா?-வைரல் வீடியோவுக்கு போலீஸ் விளக்கம்!

ஆகாஷ் காவல்துறையினரை நோக்கித் தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
Thanjavur-VCKProtest
Published on

தஞ்சாவூர் ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல கருத்துகள் பரவி வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டக் காவல் துறை அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ளது.

விசிகவினர் சாலை மறியல்

தஞ்சை ரெயில் நிலையம் முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பேனரை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர். இதைக் கண்டித்து, அகற்றிய பேனரை அதே இடத்தில் மீண்டும் வைக்கக் கோரி விசிகவைச் சேர்ந்த சுமார் 40 பேர் மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் முடிந்த ஹாரன் சத்தம்

போராட்டம் காரணமாகப் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்த வேளையில், விளார் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்துள்ளார். பணிக்குச் செல்ல தாமதமானதால், அவர் தொடர்ந்து ஹாரன் அடித்து வழி கேட்டுள்ளார். இதனால் ஆகாஷுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் உருவானது.

நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற காவல் துறை

இச்சம்பவம் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையாக மாறாமல் தடுக்கும் பொருட்டு, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் தலையிட்டு, ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால், ஆகாஷ் காவல்துறையினரை நோக்கித் தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

காவல் துறை அளித்த விளக்க அறிக்கை

சூழ்நிலை மேலும் மோசமடைவதைத் தடுக்கச் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரஹீம் குறைந்தபட்ச பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தியதாகவும், உடனே ஆவேசமடைந்த ஆகாஷ் அவரது கன்னத்தில் அறைந்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் ஆகாஷைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசிய வழக்கு நிலுவையில் இருப்பதை காவல் துறை சுட்டிக்காட்டியுள்ளது. காவல்துறை தேவையின்றி வாலிபரைத் தாக்கியதாக வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை என்றும், சட்ட ஒழுங்கைப் பராமரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் காவல் துறை தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது ஆகாஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com