

முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 695 சிறப்பு பஸ்கள் இன்று, 540 பஸ்கள் நாளை இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம். ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து திரும்ப 740 பஸ்கள் இயக்க திட்டம்.
வார இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்ற அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 695 சிறப்பு பஸ்களும் நாளை 540 கூடுதல் பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 125 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
இதேபோல பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 50 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களுக்கு 160 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகள் தேவைக்கு ஏற்ப 740 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.