சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 50 சதவீதம் நீர் இருப்பு குறைந்தது

இந்த மாதத்திற்குள் சென்னையில் குறைந்தபட்சம் 140 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும், ஆனால் நவம்பர் 10-ந்தேதி நிலவரப்படி 110 செ.மீ. மட்டுமே மழை கிடைத்துள்ளது என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 50 சதவீதம் நீர் இருப்பு குறைந்தது
Published on: 
Summary

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் 50% குறைந்துள்ளது. மழை குறைவு மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் தொய்வு காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் 1.71 மீட்டர் ஆழத்துக்கு சரிந்துள்ளது. கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க உதவக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை மற்றும் வீராணம் ஏரிகள் உள்ளது.

இந்த ஏரிகளில் உள்ள தண்ணீர் இருப்பை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50சதவீதம் அளவுக்கு குறைந்து காணப்படுகிறது. அது மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டம் சுமார் 1.71 மீட்டர் ஆழத்துக்கு சென்றுவிட்டது.

மழை குறைவு

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போதும் சென்னையில் போதிய மழை இல்லை. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியதால் சென்னையில் அதிக மழை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அளவுக்கு இன்னும் பலத்த மழை பெய்யவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே ஓரளவு மழை பெய்துள்ளது.

இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. சென்னையில் ஆண்டு தோறும் சராசரியாக 160 செ.மீ. மழை பெய்யும். இது போதாது என்பதால் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு சென்னைக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்த மாதத்திற்குள் சென்னையில் குறைந்தபட்சம் 140 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும், ஆனால் நவம்பர் 10-ந்தேதி நிலவரப்படி 110 செ.மீ. மட்டுமே மழை கிடைத்துள்ளது என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் மழைநீர் சேகரிப்பு திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது அது முறையாக கண்காணிக்கப்படுவதில்லை. சென்னையில் புதிதாக கட்டப்படும் பல வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் முழுமையாக அமைவதில்லை. அதிகாரிகளும் அதை கண்காணிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. கட்டுமான நிறுவனங்கள் பல இடங்களில் மழைநீர் சேகரிப்பை முறையாக அமைப்பது இல்லை. ஆனாலும் சி.எம்.டி.ஏ. அவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது” என்று குடியிருப்பு வாசிகள் ஆதங்கப்படுகின்றனர்.

தொய்வு

மழைநீர் சேமிப்பு திட்டத்தில் தொய்வு ஏற்பட்ட காரணத்தால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த தொடங்கி உள்ளனர். சென்னையில் இந்த ஆண்டும் போதிய மழை பெய்யாவிட்டால் ஏரிகள் வறண்டுவிடும் சூழல் உருவாகும். காரணம் இப்போது ஏரிகளில் பாதியளவு தான் தண்ணீர் உள்ளது.

எனவே தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களை பெரும்பாலும் நம்பியிருக்க வேண்டியிருக்கும் நிலை உருவாகும். முக்கிய நீர்த்தேக்கங்களான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் மற்றும் கண்ணகோட்டை-தேர்வாய் கண்டிகை ஆகியவற்றில் இப்போது 5,711.70 மில்லியன் கனஅடி நீர் தான் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 10,939.20 மில்லியன் கனஅடி நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையின் நிலத்தடி நீர்மட்டத்தை பொறுத்தவரை சராசரி ஆழம் 2025 அக்டோபரில் 3.77 மீட்டராக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அக்டோபரில் 5.48 மீட்டர் ஆழத்துக்கு சென்று விட்டது. இது 1.71 மீட்டர் சரிவாகும்.

குறிப்பாக மாதவரத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. அங்கு நீர்மட்டம் 5.80 மீட்டரில் இருந்து 10.81 மீட்டர் ஆழத்துக்கு சென்றுள்ளது. இருப்பினும், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் நகரம் முழுவதும் நீர்மட்டம் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் தற்போது மேம்பட்டு உள்ளது.

எல் நினோ குறித்து பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், மாநில அரசிடம் நீர் பாதுகாப்புத் திட்டம் முறையாக இல்லை என்று நிபுணர் ஜனகராஜன் வருத்தத்துடன் கூறினார். அரசு இதில் இப்போதே தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

X