மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
 மேட்டூர் அணை
 மேட்டூர் அணை
Published on: 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக-கர்நாடக எல்லையோரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக எல்லையோரப் பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் 6 ஆயிரம் கனஅடியானது.

தொடர்ந்து நேற்று காலை 8 ஆயிரம் கனஅடியாக உயர்ந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி அதே அளவில் நீடிக்கிறது.

பரிசல் இயக்க தடை

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

இதற்கிடையே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை இன்று 3-வது நாளாக நீடிக்கிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரை கண்டு ரசித்து வருகின்றனர்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும் நிலையில் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 57.79 அடியாக இருந்த நிலையில் அது இன்று காலை 58.95 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 23.91 டி.எம்..சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

X