இனி திமுக, அதிமுக கிடையாது-ஒரே கட்சி தவெக மட்டும்தான்: வி.எஸ்.பாபு ஆவேசம்!

இனி தமிழ்நாட்டில் திமுகவும் கிடையாது, அதிமுகவும் கிடையாது; இருக்கப்போவது ஒரே ஒரு கட்சி தவெக மட்டும் தான்
VS Babu
Published on

சென்னை பெரம்பூரில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியக் கட்சி நிகழ்வொன்றில், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு கலந்துகொண்டு பேசினார்.

மேடையில் தனது வழக்கமான அதிரடி சைகைகளுடன் ஆவேசமாக உரையாற்றிய அவர், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும், அதன் தலைவர்களையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 5 நிமிஷம் வந்தாரு... 'கொத்து பரோட்டா' போட்டாரு!

மேடையில் வி.எஸ்.பாபு பேசுகையில், "எல்லோரும் சொல்கிறார்கள் விஜய் பேச மாட்டேன்கிறார் என்று. ஆனால் அவர் பேச ஆரம்பித்தால் இவர்கள் அனைவரும் ஓடிப் போய்விடுவார்கள்.

தேர்தல் நேரத்தில் எனக்காகப் பிரச்சாரம் செய்ய நமது தலைவர் விஜய் வெறும் 5 நிமிடம் தான் கொளத்தூருக்கு வந்தார். தளபதி வந்தாரு, ஒரு 'கொத்து பரோட்டா' போட்டாரு, அத்தோடு தேர்தல் முடிந்தது! அவர் வந்த அன்றே கொளத்தூர், திரு.வி.க நகர் பகுதிகள் எல்லாம் ஜொலித்தன.

கூட்டத்தில் கூடிய 25,000 முதல் 30,000 பேரைப் பார்த்த போதே நான் ஜெயிப்பது உறுதி என்று கணித்துவிட்டேன்" என்றார்.

"கருணாநிதி நின்றிருந்தால் கூட தோற்கடித்திருப்பேன்"

தொடர்ந்து திமுக தலைமைக்கு சவால் விடுத்த அவர், "எதிரே நின்றது ஸ்டாலினாக இருந்தாலும் சரி, அவரது அப்பாவாக (கலைஞர் கருணாநிதி) இருந்தாலும் சரி, நமது தலைவர் விஜய்யின் அலைக்கு முன்னால் தவெக தான் ஜெயித்திருக்கும்.

இந்தத் தேர்தலில் கருணாநிதியே நின்றிருந்தால் கூட நான் அவரைத் தோற்கடித்திருப்பேன்" என்று கூறினார்.

திமுக விற்கு சவால்!

திமுகவின் வாரிசு அரசியலைச் சாடிய வி.எஸ்.பாபு, "திமுகவில் கடைசி வரைக்கும் அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மடடும்தான் பதவியில் இருப்பார்கள்.

முன்னாள் திமுக அமைச்சர்கள் யாராவது இனி ஒரே ஒருமுறை எம்.எல்.ஏ ஆகிவிட்டால் கூட, என் ஒரு பக்க மீசையை நான் எடுத்துக் கொள்கிறேன்" என்று மேடையில் பகிரங்கமாகச் சவால் விடுத்தார்.

ஸ்டாலினுக்கும் தெரியாது, உதயநிதிக்கு பூஜ்ஜியம்!

தொடர்ந்து பேசுகையில், "முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கே ஒன்றும் தெரியாது. இப்போது இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு பூஜ்ஜியம், ஒன்றுமே தெரியாது.

இதற்கெல்லாம் அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடலாம். எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும் அவர்களைப் பற்றியும், எடப்பாடியாரைப் பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும். இனி அவர்கள் யாரும் தேற மாட்டார்கள்" என்று சாடினார்.

இனி தமிழ்நாட்டில் ஒரே கட்சி தவெக தான்!

"தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்துவிட்டன. யாரும் வரமாட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் இன்று ஊரையே குட்டி ஒன்றாகத் திரட்டி மாபெரும் கூட்டத்தை நடத்திக் காட்டியுள்ளார் உறுப்பினர் சிவா அவர்கள்.

இதுதான் தவெக! இதுதான் நம் கட்சி! இனி தமிழ்நாட்டில் திமுகவும் கிடையாது, அதிமுகவும் கிடையாது; இருக்கப்போவது ஒரே ஒரு கட்சி, அது நமது முதல்வர் ஜோசப் விஜய்யின் தவெக மட்டும்தான்" என்று கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com