

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம்-புதுவை சாலையில் உள்ள ராகவன்பேட்டை ஆசிரியர் நகரை சேர்ந்தவர் ஜானி.
இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஹேமா. நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு வழக்கம் போல வீட்டை உள்பக்கம் தாழிட்டு கொண்டு தங்கள் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் மூகமுடி அணிந்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல், கடப்பாரையால் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அந்த கும்பல் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் வைத்திருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து கொண்டிருந்தனர்.
வீட்டில் ஏதோ சத்தம் கேட்டதால் ஜானியும், அவரது மனைவி ஹேமாவும் எழுந்து பார்த்தனர். அப்போது, வீட்டிற்குள் முகமூடி அணிந்த நிலையில் கொள்ளையர்கள் இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியாகினர்.
உடனடியாக அவர்கள் கொள்ளை கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜானி, ஹேமாவின் கழுத்தில் வைத்து மிரட்டி, ஹேமா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயின், மற்றும் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 14 பவுன் நகை என மொத்தம் 19 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்து கொண்டு கொள்ளை கும்பல் தப்பி சென்றது.
அந்த கொள்ளை கும்பல் தப்பி சென்ற போது, அந்த வீட்டின் அருகே உள்ள துரை மற்றும் லதா என்பவரது வீட்டிலும் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீட்டில் எதுவும் சிக்காததால் அந்த கொள்ளை கும்பல் தப்பி சென்றது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.