

பொன்னேரி, பழவேற்காடு பகுதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் இயக்கப்படாததால் கூட்டம் அதிகமாகி பொது மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
செங்குன்றத்தில் இருந்து தினமும் 11 மாநகர பஸ்கள் சோழவரம், ஜனப்பசத்திரம் கூட்டு சாலை, ஆண்டார் குப்பம், பொன்னேரி, மெதூர், திருப்பாலைவனம், பழவேற்காடு வரை சென்று வருகின்றன. இந்த பஸ்களை சுற்றி உள்ள கிராம மக்கள் பெரிதும் நம்பி உள்ளனர்.
பொன்னேரியில் இருந்து பழவேற்காட்டிற்கும், பொன்னேரியில் இருந்து செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வர அப்பகுதி மக்கள் மாநகர பஸ்களையே பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் பொன்னேரி, பழவேற்காடு பகுதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் இயக்கப்படாததால் கூட்டம் அதிகமாகி பொது மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்சில் பயணம் செய்ய முடியாமல் காத்திருக்கும் நிலை உள்ளது.
மேலும் ஒரே நேரத்தில் 4 அல்லது 5 மாநகர பஸ்கள் வரிசையாக வந்து நிற்பதாகவும், எந்த பஸ்சில் ஏறுவது என்று முடிவு செய்வதற்குள் வண்டிகளை டிரைவர்கள் எடுத்து செல்வதாகவும் பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இதேபோல் மாநகரப் பஸ்களில் இருபுறமும் உள்ள கதவுகளை டிரைவர்கள் சிலர் திறக்காமலேயே பயணிகளின் கூட்டத்தை பார்த்து நிறுத்தாமல் சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, பொன்னேரியில் நேற்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை சரியாக பஸ்கள் வரவில்லை. தொடர்ந்து 2 வாரங்களாக இதே நிலை காணப்படுகிறது. சாலையில் இருபுறங்களிலும் கூட்டமாக பழவேற்காடு மற்றும் செங்குன்றம் செல்ல 300-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். பின்னர் இரவு ஒரே நேரத்தில் 7 பஸ்கள் வந்தன. பஸ்களை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தாமல் நீண்ட தூரம் சென்று நிறுத்தியதால் பயணிகள் பலர் குழந்தைகளுடன் ஓடி சென்று ஏறும் நிலை ஏற்பட்டது. முதியவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். பஸ்களை தாறுமாறாக நிறுத்துவால் பொன்னேரி பஜாரில் தொடர்ந்து வாகன நெரிசல் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்களை சரியான நேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.