

அநீதி வீழ்ந்து அறம் வென்ற நன்னாளாகவும், அஞ்ஞான இருள் அகன்று மெய்ஞான ஒளி வீசும் திருநாளாகவும் தீபத் திருநாள் விளங்குவதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்கள் அனைவருக்கும் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பதிவு மூலம் நெஞ்சம் நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இருள் விலகி ஒளி பிறக்கும் உன்னதமான தீபாவளித் திருநாளை உற்சாகமாக கொண்டாடும் தமிழகச் சொந்தங்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அநீதி வீழ்ந்து அறம் வென்ற நன்னாளாகவும், அஞ்ஞான இருள் அகன்று மெய்ஞான ஒளி வீசும் திருநாளாகவும் தீபத் திருநாள் விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாலை மங்கல நீராடல், புத்தாடை அணிதல், மகிழ்ச்சி பொங்கும் பட்டாசு முழக்கங்கள், இல்லந்தோறும் ஏற்றப்படும் தீபங்களின் பிரகாசம் மற்றும் இனிப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் உறவுகளின் பாசம் ஆகியவை நமது பாரதத்தின் ஆன்மிக மற்றும் கலாசாரப் பெருமையைப் பறைசாற்றுவதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், நமது தேசம் 'வளர்ச்சியடைந்த பாரதம்' (Viksit Bharat) என்ற இமாலய இலக்கை நோக்கி வீறுநடை போட்டு முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ் மொழியையும் தமிழர்களின் ஆன்மிக மரபையும் பாரதம் முழுமைக்கும் கொண்டு சேர்த்த பிரதமரின் பண்பாட்டுச் சேவை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் பாராட்டியுள்ளார். பாரதத்தின் அபரிமிதமான வளர்ச்சியையும் செல்வாக்கையும் பொறுத்துக்கொள்ள முடியாத சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சக்திகள், ஜனநாயகத்தின் போர்வையில் தேசத்தின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிப்பதைக் சுட்டிக்காட்டியுள்ள அவர், 140 கோடி மக்கள் சக்தியின் முன் அந்தச் சதித் திட்டங்கள் சுட்டெரிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
தீபாவளித் திருநாளில் 'உள்ளூர் தயாரிப்புகளுக்குக் குரல் கொடுப்போம்' என்ற பிரதமரின் சிந்தனையை ஏந்தி, நமது தமிழ் மண்ணின் பாரம்பரியப் பட்டாசு உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களை ஆதரித்து அவர்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துமாறு அவர் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.