தமிழக முதலமைச்சர் விஜயை பாராட்டிய மத்திய அமைச்சர்..!

விமான எரிபொருளுக்கான வாட் வரியை முதலமைச்சர் விஜய் கணிசமாக குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய்- மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு
தமிழக முதலமைச்சர் விஜய்- மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு
Published on: 

வணிகப் பயணிகளுக்கான விமானப் பயணச் செலவுகளைக் குறைக்கவும், மாநிலத்திற்குள் விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை விரிவுபடுத்த ஊக்குவிக்கவும், தமிழக அரசு மாநிலத்திற்குள் விமானச் சேவைகளுக்காக திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விமான டர்பைன் எரிபொருள் (ATF) மீதான மதிப்புக்கூட்டு வரியைக் (VAT) குறைத்துள்ளது.

வரி குறைப்பு

சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கான மதிப்புக்கூட்டு வரி 29%-லிருந்து 16%-ஆகவும், மற்ற விமான நிலையங்களில் 29%-லிருந்து 1%-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 40,000 கிலோவுக்கும் குறைவான அதிகபட்ச புறப்படும் விமானங்களை இயக்கி, சென்னையை தவிர்த்து மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களுக்கு, விமான டர்பைன் எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (VAT) அரசு 5%-லிருந்து 1%-ஆகக் குறைத்துள்ளது.

வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் இந்த வரி குறைப்பு அமலுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தமிழக முதலமைச்சர் விஜயின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராம் மோகன் நாயுடு பாராட்டு

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

விமான எரிபொருள் (ATF) மீதான மதிப்புக்கூட்டு வரியைக் (VAT) குறைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கிறேன். இது விமான போக்குவரத்து துறைக்கு ஒரு நல்ல முன்னெடுப்பாகும். இந்த நடவடிக்கையை மேற்கொண்ட முதலமைச்சர் விஜய்க்கு நன்றி. விமானப் பயணத்தை மேலும் மலிவானதாக மாற்றுவதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான இத்தகைய ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது.

விமானப் பயணத்தை மலிவானதாக மாற்ற, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். பயணிகளின் நலனே எப்போதும் நமது பொதுவான முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு பதிவிட்டுள்ளார்.

விமான எரிபொருள் (ATF) ஜிஎஸ்டி (GST) வரம்பிற்குள் வராது. எனவே, மாநில அரசுகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மதிப்புக்கூட்டு வரியை (VAT) நிர்ணயிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com