

திருப்பூர் மாவட்டத்தில் பெண்களுக்கான ‘வெற்றிப் பயணம்’ இலவச பேருந்து திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் பெண்களுக்கான ‘வெற்றிப் பயணம்’ இலவச பேருந்து திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் புறநகர் சர்வீஸ் பஸ்களிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வசதி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்தில் 254 வழித்தடங்களில் டவுன் பஸ்கள் மூலம் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்து வரும் நிலையில் தற்போது புறநகர் சேவைகளும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மண்டலம் 1 மற்றும் 2-ல் இருந்து 109 பஸ்கள், பல்லடம், உடுமலை, காங்கயம், பழனி (1 மற்றும் 2), மற்றும் தாராபுரம் கிளைகளில் இருந்து 42 பஸ்கள் என மொத்தம் 151 புறநகர் பஸ்கள் இத்திட்டத்தின் கீழ் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதன்மூலம், ஏற்கனவே இயங்கி வரும் 254 டவுன் பஸ்களுடன் சேர்த்து, தற்போது மொத்தமாக 405 பஸ்கள் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டத்தின் கீழ் வலம் வரத் தொடங்கியுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 548 பஸ்களில், தற்போது 70 சதவீதத்திற்கும் அதிகமான பஸ்கள் (405 பஸ்கள்) பெண்களுக்கான இலவசப் பயணச் சேவையாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல மேலாளர் (வணிகம்) சேதுபதி கூறுகையில், சாதாரண கட்டணத்தில் இயங்கும் விரைவுப் பஸ்கள் உட்பட, ‘வெற்றிப் பயணம்’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அனைத்து சர்வீஸ் பஸ்களிலும் பெண்கள் முற்றிலும் இலவசமாகப் பயணிக்கலாம் என்றார்.
திருப்பூரில் இருந்து அவிநாசி மற்றும் பல்லடம் வழியாக கோவை, ஈரோடு, பொள்ளாச்சி மற்றும் பழனி. காங்கயத்தில் இருந்து வெள்ளக்கோவில் மற்றும் ஈரோடு.பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் கோவை. தாராபுரத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி மற்றும் பழனி. உடுமலையில் இருந்து திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம்.
புறநகர் பஸ்களிலும் இலவசப் பயணம் நீட்டிக்கப்பட்டிருப்பது திருப்பூர் மாவட்டப் பெண் தொழிலாளர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தினசரி வேலைக்காகவும் கல்விக்காகவும் வெளியூர்களுக்குப் பயணம் செய்யும் பெண்களுக்கு இந்தத் திட்டம் மிகப்பெரிய பொருளாதார நிவாரணமாகவும், பாதுகாப்பான பயண அனுபவமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.