குஜராத்தை சேர்ந்தவர் பிரதமர் ஆகும்போது தமிழரும் பிரதமர் ஆகலாம் - குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

மகத்தான நாடாக, எல்லோருக்கும் வழிகாட்டும் நாடாக இந்தியா உருவாகும்.
CP Radhakrishnan
Published on: 

தமிழர் ஒருவர் நிச்சயம் இந்திய பிரதமர் ஆவார் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று (அக். 30) காலை மதுரை வந்தார். அங்கு முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை மீனாட்சி அம்மன் கோயிலக்கு சென்றார். கோயில் நிர்வாகம் சார்பாக அவருக்கு பரிவட்டம் அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. கோயில் அறங்காவலர் ருக்மணி பழனிவேல் ராஜன் தலைமையிலான அறங்காவலர் குழுவும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் உடனிருந்து அவரை வரவேற்றனர்.

பிரதமராக தமிழர்:

இதைத் தொடர்ந்து கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசும் போது, "மதுரை மீனாட்சி அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். ஒரு தமிழர் பிரதமர் ஆவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது.

ஒரு கன்னடர், குஜராத்தை சேர்ந்தவர் பிரதமர் ஆகும்போது தமிழரும் பிரதமர் ஆகலாம். ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியா வல்லரசு ஆவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மகத்தான நாடாக, எல்லோருக்கும் வழிகாட்டும் நாடாக இந்தியா உருவாகும்.

15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வல்லரசு ஆகும் என கூறினால் நம்பிக்கை இருக்காது. ஆனால், இப்போது இந்தியா வல்லரசு ஆகும் என்று சொன்னால் மக்களுக்கு நம்புவார்கள். அதே நம்பிக்கை தான் உலகின் நான்காவது வல்லரசாக இந்தியாவை உருவாக்கியுள்ளது. நிச்சயம் உலகின் முதல் வல்லரசு நாடாக இந்தியா உருவெடுக்கும்," என்று தெரிவித்தார்.

X