கனிம வளம் கொண்டு வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தம்- டிரைவர்கள் போராட்டம்

கனிம வளங்களுடன் வந்த டெம்போக்களை குமரி மாவட்டத்திற்குள் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை.
கனிம வளம் கொண்டு வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தம்- டிரைவர்கள் போராட்டம்
Published on: 
Summary

ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி அருகே டெம்போ டிரைவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து குமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரல்வாய்மொழி

நெல்லை மாவட்டத்தில் இருந்து ஆரல்வாய்மொழி வழியாக குமரி மாவட்டத்திற்குள் கனிம வளங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் இருந்து வரும் லாரிகள் எந்த இடத்திற்கு கனிம வளங்களை கொண்டு செல்கிறோம் என்ற விவரத்திற்கான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும் என்று குமரி மாவட்ட போலீசார் கூறியிருந்தனர். அதுமட்டுமின்றி கனிம வளம் கொண்டுவரும் லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

கனிம வளம்

இந்தநிலையில் நேற்று இரவு 20-க்கும் மேற்பட்ட டெம்போக்களில் நெல்லை மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டம் நோக்கி கனிம வளங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் போலீசார் அவற்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். டிரைவர்களிடம் கனிம வளங்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என்பதற்கான ஆதாரங்ளை கேட்டனர். ஆனால் அவர்களிடம் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இதனால் கனிம வளங்களுடன் வந்த டெம்போக்களை குமரி மாவட்டத்திற்குள் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை.

பேச்சுவார்த்தை

இதனால் போலீசாருக்கும், டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி அருகே டெம்போ டிரைவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பிச்சையா சம்பவ இடத்திற்கு வந்து டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குமரி மாவட்டம்

அதில், “அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக கனிம வளங்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என்பதற்கான ஆதாரம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எக்காரணத்தை கொண்டும் வாகனத்தை குமரி மாவட்டத்துக்கு உள்ளே அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

டிரைவர்கள்

இதனைத்தொடர்ந்து கனிம வளங்களுடன் வந்திருந்த வாகனங்கள் அங்கிருந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் கனிம வளங்களை கொண்டு வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். தற்போது ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என்றும் கூறியுள்ளோம். எந்த இடத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான ஆவணங்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும். சரியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com