

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு அனந்தபூர், வீ-கோட்டா, மாலூர் பகுதிகளில் இருந்து வரும் அவரைக்காய், பீன்ஸ் வரத்து மழையின்மை காரணமாக கடுமையாக குறைந்துள்ளது. வழக்கமாக தினசரி 1,800 மூட்டை பீன்ஸ், 1,000 மூட்டை அவரைக்காய் வருவதற்கு பதிலாக இன்று 800 மூட்டை பீன்ஸ், 180 மூட்டை அவரைக்காய் மட்டுமே வந்ததால், மொத்த மற்றும் வெளி மார்க்கெட்டுகளில் விலை திடீர் உயர்வு கண்டுள்ளது.
சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் அனந்தபூர் வீ-கோட்டா கர்நாடகா மாநிலம் மாலூர் ஆகிய பகுதிகளில் இருந்து அவரைக்காய் மற்றும் பீன்ஸ் அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. தினசரி 1,800 மூட்டை பீன்ஸ், 1000 மூட்டைகள் அவரைக்காய் விற்பனைக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் போதிய மழை இல்லாமல் காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பீன்ஸ், அவரைக்காய் வரத்து குறைந்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 800 மூட்டைகளில் பீன்ஸ் மற்றும் 180 மூட்டைகளில் அவரைக்காய் மட்டுமே விற்பனைக்கு வந்தன.
இதனால் மொத்த விற்பனையில் அவரைக்காய் ஒரு கிலோ ரூ.120-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.150 வரையிலும் அவரைக்காய் ஒரு கிலோ ரூ.170 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120 வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.56 வரையிலும், தக்காளி, ஊட்டி கேரட் மற்றும் முருங்கைக் காய் கிலோ ரூ.40-க்கும், ஊட்டி பீட்ரூட் கிலோ ரூ.50-க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.